‘தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?’ – தமிழக வேளாண் பட்ஜெட்டை வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம்
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், விவசாயிகளின் நலனை புறக்கணித்த பட்ஜெட்டாக இது அமைந்துள்ளதாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர், தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து வேளாண் பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும், விதைப்புக் காலத்தில் விவசாயிகளுக்கு ரூ.15,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பும் என்ன ஆனது என்றும் அவர் வினவினார்.
தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், அவை அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின், “மூன்று வேளை பசி எடுத்தால் சாப்பாட்டை நினைக்கிறோம்; ஆனால் அந்த சாப்பாட்டை உருவாக்கும் விவசாயியை மறந்துவிடுகிறோம்” என்ற வசனத்தை மேற்கோள் காட்டிய அவர், விவசாயிகளின் நலனுக்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்தப்படவில்லை என விமர்சித்தார்.
பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றுக்கு அடித்தளமாக இருக்கும் விவசாயிகளின் நலனை அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டிய வானதி சீனிவாசன், தற்போதைய வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.



