தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட பொது மற்றும் வேளாண் பட்ஜெட்: முதல்வர் விஜய் பாராட்டு
தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், மக்கள் நலனையும் மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 2026 – 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரின் பாராட்டையும் பெறும் வகையில் பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் ர.வினோத்துக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையானது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், வேளாண்மையுடன் தொடர்புடைய கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு விவசாயிகளின் நலனை பாதுகாத்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் வேளாண் பட்ஜெட் அமைந்துள்ளதாக கூறிய முதல்வர் விஜய், வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



