உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு: சென்னை உள்ளிட்ட பல இடங்களில் தவெக ஆர்ப்பாட்டம்; அமைச்சர்கள் கடும் கண்டனம்
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் கருத்துகள் தொடர்பாக அரசியல் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. தமிழக முதல்வர் குறித்து அவதூறாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் மகளிரணி நிர்வாகிகள் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அரசியல் பரபரப்பு நிலவியது. ஒரு தரப்பில் திமுகவினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், மறுபுறம் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெகவினரும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டு உதயநிதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீலாங்கரை மற்றும் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தவெக மகளிரணி சார்பில் தனித்தனி கண்டன போராட்டங்கள் நடைபெற்றன.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினின் பேச்சை பல்வேறு அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்தனர். நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், எதிர்க்கட்சித் தலைவர் பதவியின் பொறுப்பையும் மரபையும் உணராமல் பேசியுள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெண்கள் குறித்து உதயநிதி வெளிப்படுத்திய கருத்துகள் அவரது மனப்போக்கை வெளிப்படுத்துவதாகவும், அதை எந்தத் தாய்மாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், உதயநிதி ஸ்டாலின் பேச்சு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பதை திமுகவினர் தங்களது குடும்பத்தினரிடமே கேட்டு அறிய வேண்டும் என விமர்சித்தார். மேலும், எதிர்க்கட்சித் தலைவராக மட்டுமல்லாமல், ஒரு எம்எல்ஏவாக கூட இருக்கத் தகுதியற்றவர் என்றும் அவர் கடுமையாகக் கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திமுகவின் அரசியல் நடைமுறையையே விமர்சித்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான எந்தக் கருத்தையும் ஏற்க முடியாது என்றும், பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் நிலையில் இத்தகைய பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை என்றும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இரு கட்சிகளும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருவதால், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மீது கவனம் திரும்பியுள்ளது.



