அறநிலையத் துறை முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை: அமைச்சர் ரமேஷ் தகவல்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கோயில் சொத்துக்கள் தொடர்பான விவரங்கள், நடந்ததாக கூறப்படும் தவறுகள் மற்றும் அதில் தொடர்புடையவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாளை முன்னிட்டு, திருச்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ், உண்மையில் சட்டப்பேரவையில் தொடர்ந்து செயல்பட்டு வந்த ஸ்டாலின் தற்போது சட்டப்பேரவை நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த ஆந்திர பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தவறு நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் ஆய்வு செய்து வருவதாகவும், நிதிநிலையை கருத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரத்திலும் அவர் தனது கருத்துகளை தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான ஆய்வு நடைபெற்று வருவதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். எந்தெந்த கோயில் சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன, என்னென்ன தவறுகள் நடைபெற்றுள்ளன, அதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதற்கும், முறைகேடுகளை கண்டறிவதற்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும் என்றும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



