காவல்துறையினரின் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து குறைகளுக்கும் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
காவல்துறையினரின் பதவி உயர்வு, பணிமூப்பு மற்றும் பணிச்சலுகைகள் தொடர்பாக நீண்ட காலமாக நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையினரின் பதவி உயர்வு விவகாரத்தில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, நீதிமன்ற வழக்குகளை மட்டுமே நம்பி அரசு செயல்படுவதால் ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1994-95ஆம் ஆண்டு காவல் சார் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,198 பேரில், 98 பேருக்கு தாமதமாக 2000ஆம் ஆண்டில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய பணிமூப்பு வழங்கப்படாததே தற்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த 98 பேரில் இருவருக்கு மட்டும் பழைய பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், இதன் தாக்கம் பின்னர் பணியில் சேர்ந்த பல தலைமுறை காவல்துறையினருக்கும் தொடர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 1998-99, 2004 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் காவல் சார் ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்ட பலருக்கும் காலத்திற்கேற்ற பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதாகவும், இதற்கு அரசின் நிர்வாகத் தவறுகளே காரணம் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய பணிமூப்பும் பதவி உயர்வும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், தமிழ்வழிக் கல்வியில் பயின்ற காவலர்களுக்கு காவல் சார் ஆய்வாளர் தேர்வில் வழங்கப்பட வேண்டிய 20 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்றும், இதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டம் காலாவதியான நிலையில், அதனை மீண்டும் இயற்றி உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், காவல்துறையில் பணியாற்றும் விரல்ரேகை நிபுணர்களுக்கு சிறப்பு ஊதியம், இரவு நேரப் பணி படி, ஆபத்து படி மற்றும் சில இடங்களில் உணவுப்படி கூட வழங்கப்படாதது பாகுபாடான அணுகுமுறையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வேறுபாடுகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையினரின் பதவி உயர்வு, பணிமூப்பு, இடஒதுக்கீடு, ஊதியச் சலுகைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைத்து, ஒரு மாதத்திற்குள் அறிக்கை பெற்று முழுமையான தீர்வை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



