தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பவர்களையே ‘எட்டப்பர்கள்’ என குறிப்பிட்டார் ராகுல்; மாணிக்கம் தாகூர் விளக்கம்
மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கும் அரசியல் கட்சிகளையே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எட்டப்பர்கள்’ என்று குறிப்பிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர் கூறுகையில், மக்களவையில் இந்த வாரம் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். ஏற்கெனவே ஏப்ரல் 17-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதாகவும், அதேபோல் மீண்டும் அதை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றும் கூறினார். தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த மசோதாவை எதிர்ப்பது மாநில நலனுக்காக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஏப்ரல் 17-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதா தோல்வியடைந்தபோது கொண்டாடியவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், தொகுதி மறுவரையறைக்கு பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆதரவு தெரிவித்ததாகவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார். இந்த மசோதாவுக்கு இனி எந்தெந்த கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன என்பது விரைவில் தெளிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தி பயன்படுத்திய ‘எட்டப்பர்கள்’ என்ற வார்த்தை குறித்து விளக்கமளித்த மாணிக்கம் தாகூர், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் கட்சிகளையே அவர் அந்த வகையில் குறிப்பிட்டதாக தெரிவித்தார். மேலும், காவிரி நீர் விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய அவர், கர்நாடகாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் மாநில நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவதாகவும், அதே நேரத்தில் தமிழகத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் விமர்சித்தார். தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைப்பதே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



