கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் பாதிக்கப்படுகிறது; காவிரி, கச்சத்தீவு விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் விமர்சனம்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், காவிரி நீர் பகிர்வு முதல் கச்சத்தீவு விவகாரம் வரை தமிழக நலனில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில்தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த ஆணையம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டபோதும், கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு அதை முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய அரசை குற்றம் சாட்டுவது மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றாதது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் சொந்த அரசையே கேள்வி கேட்க வேண்டும் என்றும், தமிழக முதல்வருடனான சந்திப்பு தொடர்பாக கர்நாடக அரசின் அணுகுமுறையையும் விமர்சித்துள்ளார். அதேபோல், மேகேதாட்டு அணைத் திட்டத்தை கைவிடுமாறு கர்நாடக காங்கிரஸ் அரசிடம் வலியுறுத்தாமல், அரசியல் விமர்சனங்களில் ஈடுபடுவது பொருத்தமல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காவிரி நீர் பிரச்சினை குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது, தமிழகத்தின் மீது காங்கிரஸுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவு விவகாரத்திலும் மீனவர்களின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் பாஜக எப்போதும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



