டாஸ்மாக் லாரி டெண்டர் வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி; தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது
டாஸ்மாக் லாரி டெண்டர் பெற்றுத் தருவதாக கூறி, அமைச்சர் பெயரை பயன்படுத்தி ரூ.25 லட்சம் வசூலித்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான தவெக நகர நிர்வாகிகள் இருவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அருப்புக்கோட்டை தவெக நகரச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மேற்கு நகரச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோரை சிலர் அணுகி, டாஸ்மாக் குடோனிலிருந்து மதுபான பாட்டில்களை கடைகளுக்கு கொண்டு செல்லும் லாரி போக்குவரத்து டெண்டரை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷிடம் பேசி டெண்டரை பெற்றுத் தர முடியும் என்றும், அதற்காக பணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த வாக்குறுதியின் அடிப்படையில், டெண்டர் ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் வரை இருவரும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இந்த விவகாரம் அமைச்சர் விக்னேஷின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தரப்பில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். டெண்டர் தொடர்பாக பணம் வசூலிக்கப்பட்ட விதம், மேலும் இதில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



