விதிகளை மீறி செயல்படும் 129 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழகத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வரும் 129 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய்க்கு ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசு கடந்த மே 12-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை மூட உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2019-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி தமிழக மக்கள் தொகையில் 14.2 சதவீதம் பேர் மது அருந்துபவர்களாக இருந்த நிலையில், 2023-24 ஆண்டுக்கான தேசிய குடும்பநல கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை 23.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் மது அருந்துவோரின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருப்பதாகவும், இது மக்களின் சேமிப்பு மற்றும் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு குறிப்பிட்டுள்ள 500 மீட்டர் விதிமுறைக்குள் செயல்படும் டாஸ்மாக் கடைகள் குறித்து தங்களது அமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில் விதிகளை மீறி தொடர்ந்து இயங்கி வரும் 129 கடைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
எனவே, அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் அந்த 129 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக கண்டறிந்து மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.



