10 நாட்களில் 6 முதியவர்கள் படுகொலை – முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிறார் நயினார்
கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைப்பதாகவும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் செயல்திறன் இல்லை என்றால் முதல்வரும் அவரது அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகிக் கொள்ளட்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “கடந்த 10 நாட்களில் மட்டும் 6 மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கழித்தும் கூட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாத முதல்வர் விஜய்யின் நிர்வாக திறனின்மை கடும் கண்டனத்திற்குரியது.
திரும்பும் இடமெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரம், மாமூல் வேட்டைகள் என குற்றச் செயல்கள் கண்களை மறைக்கின்றன. வீட்டில் தனியே இருக்கவும், குடும்பத்துடன் வெளியில் செல்லவும் தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் விஜய் தலைமையிலான அமைச்சரவையோ ஆளுக்கொரு ரீல்ஸ் எடுத்து அதை டிரெண்டிங் பிஜிஎம் உடன் பொருத்தி வெளியிட்டு கொண்டிருப்பது மாண்பற்றது.
சீரழிந்த சட்டம் ஒழுங்கு சமன்படும், மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் மாற்று சக்தி என்று தங்களை கூறிக்கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் செயல்திறன் இல்லை என்றால் முதல்வரும் அவரது அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகிக் கொள்ளட்டும். தகுதியான தலைமையை தமிழகம் தேடிக்கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.



