மது வணிக திட்டங்களை கைவிட்டு மதுவிலக்கை அமல்படுத்துக – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
மது வணிகத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தமிழர்களின் மரபணுவிலேயே மது மீதான மோகமும் அடிமைத்தனமும் பதிந்துவிடும் என்று பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இது அதிர்ச்சி அல்ல, மிகப்பெரிய ஆபத்தை நோக்கி தமிழகம் பயணிக்கும் சூழலில் ஊதப்பட்டுள்ள அபாய சங்கு.
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் குழந்தைசாமி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 1971-ல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது முதல் 55 ஆண்டுகளாக இரண்டு தலைமுறையினர் மது குடிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் மரபணுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மூன்றாவது தலைமுறையும் தொடர்ந்து குடித்தால் தமிழர்களின் மரபணுக்களில் மாற்றம் ஏற்பட்டு, பிறக்கும் குழந்தைகள் மதுவுக்கு அடிமைகளாகவே பிறக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் எச்சரித்துள்ளார். இதையே பாமக 40 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மதுவால் ஏற்படும் பாதிப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் 60 நோய்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது 200 நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது. 7 வகை புற்றுநோய்கள், கல்லீரல் இழைநார் வளர்ச்சி, நிமோனியா, காசநோய், ஆண்மையிழப்பு ஆகியவை முக்கியமானவை.
1937-38ல் ராஜாஜி சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் முழு மதுவிலக்கை கொண்டு வந்தார். பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்திற்கும் நீட்டித்தார். 1971 வரை 25 ஆண்டுகள் ஒரு தலைமுறையே மதுவை மறந்திருந்தது. ஆனால் 1971ல் ராஜாஜியின் எச்சரிக்கையை மீறி கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி சாராயக் கடைகளை திறந்தது.
கடந்த திமுக ஆட்சியில் 5,000 மதுக்கடைகளுடன் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்து கடைகள், 1,200க்கும் மேற்பட்ட மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டதால் இளைஞர்கள் பெருமளவில் மதுவுக்கு அடிமையானார்கள். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அருகே இருந்த கடைகள் மூடப்பட்டபோது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் தற்போது ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி, அரசு மதுக்கடைகளை தனியார்மயமாக்கும் முடிவு போன்ற செய்திகள் அந்த நம்பிக்கையை குலைத்துள்ளன. தவெக ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாக இருக்குமோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்கள் நோயில்லா வாழ்வுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள். அவர்களை நிரந்தர குடிகார சமுதாயமாக மாற்றிவிடக் கூடாது. எனவே மது வணிகத்தை ஊக்குவிக்கும் திட்டங்களை கைவிட்டு முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.



