மக்களவையில் சர்ச்சை பேச்சு: ராகுல் காந்தி மீது பாஜக எம்பி அனுராக் தாக்குர் உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மக்களவையில் நடந்த விவாதத்தின் போது வினாத்தாள் கசிவு மற்றும் இளைஞர்கள் போராட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, “தங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைப்பவர்கள் முட்டாள்கள்” என்று விமர்சித்திருந்தார். அவரது இந்த கருத்து பாஜக உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பையும், அவையில் அமளியையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் மற்றும் அவமதிப்பு நோட்டீஸை அனுராக் தாக்குர் தாக்கல் செய்தார். இந்த நோட்டீஸ் மீது இன்று (ஜூலை 31) விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் உயர்நிலைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு பதிவில் அவர், “டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விளக்கம் அளிக்க நாடாளுமன்றத்திற்கு வர மத்திய அமைச்சர் அமித் ஷா ஏன் அஞ்சுகிறார்? மாணவர்கள் மீது தடியடி மற்றும் பெல்லட் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.



