மேகேதாட்டு தீர்மான திருத்தத்தை ரத்து செய்ய கோரி அதிமுக கொறடா வழக்கு: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சேர்க்கப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், “மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 19-ம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் கோரிக்கையை ஏற்று, நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் அதில் கொண்டுவரப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அந்த மனுவில், “இந்த திருத்தத்திற்கு அப்போதே அதிமுக, பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜூன் 18-ம் தேதி எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட சிறப்பு தீர்மான நகலில் இந்த திருத்தம் இடம்பெறவில்லை. எந்த விவாதமும் நடத்தாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் ஒருமனதாக நிறைவேறவில்லை என்றபோதும், ஒருமனதாக நிறைவேறியதாக கூறி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே நடுவர் மன்றம் தொடர்பான திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர், சட்டப்பேரவை செயலர் மற்றும் மத்திய ஜல்சக்தித் துறை செயலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.



