அண்ணாமலை பக்கம் தாவியதால் காலியான பாஜக பதவிகளை நிரப்ப முடிவு – நயினார் நாகேந்திரன் அதிரடி
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்ட தலைவர் கிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக மேகேதாட்டு அணை பிரச்சினையில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
மேலும், பாஜகவிலிருந்து விலகி முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ அமைப்பில் இணைந்தவர்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். காலியாக உள்ள அந்த பதவிகளுக்கு தகுதி வாய்ந்த புதிய நிர்வாகிகளை உடனடியாக நியமிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே கூட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன், “விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான் அடுத்த ஆட்சியை பிடிக்கும் என சிலர் ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை” என்று காட்டமாக தெரிவித்தார்.



