டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் பார் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், பார் உரிமங்களுக்கான டெண்டர் நடைமுறைகள், சட்டவிரோதமாக பார்கள் செயல்பட்டது மற்றும் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடந்த ஜூலை 28-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் எஸ்.விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மண்டல மேலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கில், டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்திருந்த போதிலும், பார் டெண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகளில் குறைவான வருவாய் கிடைத்ததாக கணக்குகள் காட்டப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 857 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்றவர்கள் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து முன்பண தொகையை செலுத்தியதாகவும், இதன் மூலம் கூட்டு சதி நடைபெற்றிருக்கலாம் எனவும் விசாரணை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், 857 டாஸ்மாக் பார்களில் 284 பார்கள் மூடப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவை உரிய உரிமம் இல்லாமல் தொடர்ந்து செயல்பட்டதாகவும், இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், டாஸ்மாக் கிடங்குகளுக்கான போக்குவரத்து டெண்டர் மற்றும் பழைய மதுபான பாட்டில்கள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும், டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அவரை தொடர்புபடுத்த முடியாது என்றும் வாதிட்டார்.
மேலும், டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காகவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், செந்தில் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஆரம்ப கட்ட விசாரணையில் குறைந்தது ரூ.100 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும், முழுமையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
இதனை தொடர்ந்து உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன், தற்போதைய சூழலில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தார். வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதாகவும், முறைகேடு மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக முதற்கட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



