4 முன்னாள் எம்எல்ஏக்கள் விவகாரம்: இபிஎஸ் விசாரணை ஆஜர் தேதி ஆகஸ்ட் 4-க்கு மாற்றம்
அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த 4 முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) ஆஜராக வேண்டிய தேதி ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர், பின்னர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதற்கு முன்னதாக, கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, நான்கு முன்னாள் எம்எல்ஏக்களும் இரண்டு முறை சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில் நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்திருந்தனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் ஜூலை 30-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் அந்த விசாரணை தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவைச் செயலாளர் ஆர். சாந்தி வெளியிட்ட தகவலின்படி, எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் நான்கு முன்னாள் எம்எல்ஏக்களும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் முன்பு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



