நகை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி சரவணகுமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பெண் ஒருவரை கட்டிப்போட்டு 21 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தவெக விருதுநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சரவணகுமார் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கடந்த வாரம் கைது செய்தனர். இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு மற்றும் நலனுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக கிடைத்த தகவல்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் சரவணகுமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிமேல் சரவணகுமார் தவெக கட்சியின் பெயர், கொடி, சின்னம் அல்லது எந்தவொரு பொறுப்பையும் பயன்படுத்தி செயல்படக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கும் கட்சியின் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அல்லது அமைப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



