கெலவரப்பள்ளி அணை பிரச்சினை: மனு அளிக்க வந்த இளைஞர்களை சந்திக்காத அமைச்சர் கீர்த்தனா மீது அதிருப்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் ஆய்வு மேற்கொண்ட தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அளிக்க வந்த இளைஞர்களை சந்திக்காமல் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணைக்கு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொள்ள வந்தபோது, அணையின் தற்போதைய நிலை, பராமரிப்பு பணிகள் மற்றும் அப்பகுதியின் நிலவரம் குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த அணையில் நீண்ட காலமாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் கலப்பதால் நுரை பொங்கி வழியும் பிரச்சினை தொடர்ந்து வருகிறது.
ரசாயனக் கழிவுநீர் கலப்பால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் சார்பில் ரசாயன நுரையை கட்டுப்படுத்தவும், விவசாயத்துக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் தண்ணீரை சுத்தப்படுத்தவும் ஒரு தற்காலிகத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை அமைச்சரிடம் வழங்கி பிரச்சினையை நேரில் விளக்குவதற்காக இளைஞர்கள் அணைப் பகுதிக்கு வந்திருந்தனர்.
அப்போது அமைச்சர் கீர்த்தனாவிடம் மனுவை வழங்க முயன்றபோது, அவர் அதை வாங்காமல் அங்கிருந்து சென்றதாக இளைஞர்கள் குற்றம்சாட்டினர். மேலும், காரின் கண்ணாடியை மூடிக்கொண்டு சென்றது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகி நிருபன் கூறுகையில், கெலவரப்பள்ளி அணையில் கலக்கும் ரசாயனக் கழிவுநீரால் விவசாய நிலங்கள், கால்நடைகள் மட்டுமின்றி பொதுமக்களின் உடல்நலமும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும், ரசாயன நுரையை தற்காலிகமாக குறைத்து விவசாயத்திற்கு ஓரளவு சுத்தமான தண்ணீர் கிடைக்கச் செய்யும் வகையில் எளிய திட்டம் ஒன்றை தயாரித்து வைத்திருந்ததாகவும், அதனை அமைச்சரிடம் வழங்க முயன்றும் அவர் தங்களை சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர், அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் சென்றது கவலை அளிப்பதாகவும், அரசு ஆய்வு நிகழ்ச்சி பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்கும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் இளைஞர்கள் தெரிவித்தனர்.



