கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தீவிரம்
கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடு உள்ளிட்ட மொத்தம் 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று (ஜூலை 29) அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதேவேளை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மன்னார்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மதுபான ஆலைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகே ராமமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் இன்று காலை 7 மணியளவில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜியின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனின் மூர்த்திபாளையம் இல்லம், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் கோயம்பள்ளி வீடு, கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் அலுவலகம், கோதை நகரைச் சேர்ந்த சக்தி மெஸ் கார்த்தி மற்றும் அவரது பங்குதாரர் ரமேஷின் வீடு உள்ளிட்ட மொத்தம் 6 இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் சோதனைக்கு உட்பட்ட கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர், தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரைப் பேரம் தொடர்பான விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி போலீஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



