மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அமைச்சர் பதிலை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் அளித்த பதிலை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். அந்தப் பதில், தற்போதைய சட்ட நிலை மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படை கோட்பாடுகளை முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றும், இது கீழ்ப்படுகை மாநிலங்களின் உரிமைகள் குறித்து தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில், மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு எந்த கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு முன் கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்று உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்ற மத்திய இணை அமைச்சரின் பதிலுக்கு முதல்வர் விஜய் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். கர்நாடகா–ஆந்திரப் பிரதேசம் இடையேயான ஆலமட்டி அணை வழக்கில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் மற்றும் மத்திய அரசின் அனுமதி இன்றி மேல்படுகை மாநிலம் திட்டங்களை முன்னெடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியலமைப்பு அமர்வே தெளிவாக தீர்ப்பளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், காவிரி நீர்விவகார நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ள முதல்வர், ஒவ்வொரு மாநிலமும் தங்களது எல்லைக்குள் நீரை பயன்படுத்தும் அதிகாரத்தை நடுவர் மன்றத்தின் உத்தரவுகளுக்கு முரணாக பயன்படுத்த முடியாது என்று வலியுறுத்தியுள்ளார். கீழ்ப்படுகை மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீரின் அளவையோ அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட நீர் வெளியீட்டு முறையையோ பாதிக்கும் எந்தத் திட்டமும் முழுமையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவின் பாம்பாறு புனல்மின் திட்டம் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். கீழ்ப்படுகை மாநிலங்களின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் நீர் வெளியீடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற நடுவர் மன்றத்தின் நிலைப்பாடு, மேகேதாட்டு திட்டத்துக்கும் பொருந்தும் என அவர் விளக்கியுள்ளார். அதேபோல், 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு சமர்ப்பித்த மேகேதாட்டு விரிவான திட்ட அறிக்கையை, நடுவர் மன்றத் தீர்ப்புடன் முழுமையாக ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தால் மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியதையும் அவர் நினைவூட்டியுள்ளார்.
இதையடுத்து, மாநிலங்களவையில் ஜூலை 27, 2026 அன்று கேட்கப்பட்ட நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் 876-க்கு மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் முழுமையாக இணங்குவதாக உறுதி செய்யப்படாத வரை மேகேதாட்டு திட்டத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அல்லது நிர்வாக அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், கீழ்ப்படுகை மாநிலங்களின் நீருரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, காவிரி என்பது ஒரு சாதாரண நதியல்ல; தென்னிந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் மற்றும் விவசாய வாழ்வாதாரத்தின் ஆதாரமாக விளங்கும் உயிர்நாடி என்று முதல்வர் விஜய் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும் காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவுகளும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், நீதி, கூட்டாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



