ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா மீதான தேர்தல் வழக்கு: ஐகோர்ட் உத்தரவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கில், மனுவை நிராகரிக்க கோரிய எம்எல்ஏவின் மனுவுக்கு பதிலளிக்க வாக்காளர் கீதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளையராஜாவின் தேர்தலை எதிர்த்து, அந்த தொகுதி வாக்காளரான கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தல் நடைமுறையில் ஏற்பட்டதாக கூறப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜாவின் பெயருக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தன்னுடைய வெற்றிக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரி தவெக எம்எல்ஏ இளையராஜா சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க மனுதாரர் கீதாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதுபோல், திருவண்ணாமலை தொகுதி திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த எஸ்.ஜெயக்குமார், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கே.சிவக்குமார், சீர்காழி தொகுதி மதிமுக எம்எல்ஏ ஆர்.செந்தில்செல்வன் ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளில் எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால், அனைத்து வழக்குகளின் விசாரணையும் ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.



