மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் விஜய் விட்டுக்கொடுத்தார்: உதயநிதி குற்றச்சாட்டு
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்காமல், ஆட்சியை காப்பாற்றுவதற்காக முதல்வர் விஜய் சமரசம் செய்து கொண்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக நலன்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்கு தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் தெரிவித்திருப்பது, காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெல்லி அரசியல் தலைமைகளை எதிர்க்காமல் இருப்பதற்காகவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தமிழகத்தின் உரிமைகளை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மத்திய அரசிடம் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் ஏற்கெனவே வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் அரசியல் காரணங்களுக்காகவும், திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற அச்சத்தாலும் முதல்வர் விஜய் எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும், விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டும் முயற்சி தொடர்ந்தால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மேகேதாட்டு அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



