நீட் போராட்டக்காரர்கள் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் கடும் விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் குறித்து பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது: நீட் விவகாரத்தில் நடைபெற்ற போராட்ட வீடியோக்களை பார்த்ததாகவும், தனது வாழ்நாளில் ஒரே இடத்தில் இதுபோன்ற மோசமான காட்சிகளை பார்த்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்ற சிலர் பேசும் விதமும், பயன்படுத்தும் வார்த்தைகளும் மிகவும் கீழ்த்தரமாகவும், கடுமையாகவும் இருப்பதாக கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார். இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் கொண்ட நாடு என்றும், மக்கள் கண்ணியத்துடன் வாழும் இடம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களை தாங்களே அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வதாகவும், இதுபோன்ற செயல்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
போராட்டம் தொடர்பான வீடியோக்களை பார்த்ததால் தனது மனம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து விடுபட சில காலம் சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருப்பதே சிறந்தது எனவும் கங்கனா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் கொண்டு வரப்படும் மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடையூறு செய்வதாகவும், கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை அவர்கள் திட்டமிட்டு தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



