தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக புகார்: செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக போலீஸ் விசாரணை
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் போலீஸார் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில், அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.
ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் தினமும் காலை மற்றும் மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், போலீஸார் நடத்தும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். அப்போது, காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து போலீஸார் கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் நேற்று 2-வது நாளாக காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் தொடர்புடைய மேலும் சில தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



