சென்னை, புறநகர் நீர்நிலைகள் தூர்வாரும் பணி இன்று தொடக்கம்: அமைச்சர் ஆனந்த் களஆய்வு
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் ஏரிகளை பராமரிக்கும் வகையில் தூர்வாரும் சிறப்பு பணிகள் இன்று தொடங்குகின்றன. பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் களஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.
நீர்வளத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்னை நகரில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறுகள், பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு உள்ளிட்ட வடிகால்கள், வேளச்சேரி, புழல், நாராயணபுரம், ஆதம்பாக்கம் மற்றும் கோவிலம்பாக்கம் ஏரிகள் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகள் உள்ளன. மேலும் அடையாறு, கூவம் மற்றும் முட்டுக்காடு முகத்துவாரங்களும் இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் சுமார் 60 கிலோமீட்டர் நீளத்தில் ஆறுகளும், 54 கிலோமீட்டர் நீளத்தில் கால்வாய்களும், 3,700 ஹெக்டேர் பரப்பளவில் ஏரிகளும் அமைந்துள்ளதால், அவற்றை முறையாக தூர்வாரி பராமரிப்பது அவசியம் என நீர்வளத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் மழைநீர் சீராக வெளியேறுவதற்கும், வெள்ள அபாயத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த தூர்வாரும் பணிகள் பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டங்கள் (CSR) மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு களஆய்வின் போது மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இன்று கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதிப்பகுதி மற்றும் ஒக்கியம் மடுவில் பணிகள் தொடங்கப்படுகின்றன. ஜூலை 28-ம் தேதி மணப்பாக்கம் அருகே அடையாறு நதிப்பகுதி மற்றும் சோழிங்கநல்லூர் அக்கரை பாலம் அருகிலுள்ள தெற்கு பக்கிங்காம் கால்வாயில் பணிகள் நடைபெற உள்ளன.
தொடர்ந்து ஜூலை 29-ம் தேதி வேளச்சேரி ஏரி மற்றும் நாராயணபுரம் ஏரி பகுதிகளில் தூர்வாரும் பணிகளை அமைச்சர் என். ஆனந்த் ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார். நீர்நிலைகளை சீரமைத்து பராமரிக்கும் இந்த நடவடிக்கை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.



