தர்மேந்திர பிரதான் பதவி விலகியது தன்னலமற்ற சேவையின் உயர்ந்த நிலை: பாஜக
மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் உயர்ந்த வெளிப்பாடு என்று பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய கல்வி அமைச்சராக இந்தியாவின் கல்விச் சூழலை மாற்றியமைப்பதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதிலும் தர்மேந்திர பிரதான் முக்கிய பங்காற்றினார்.
பரந்த நலன்களை கருத்தில் கொண்டு அவர் பதவியில் இருந்து விலக எடுத்த முடிவு, பொது வாழ்வில் நேர்மை மற்றும் சுயநலமற்ற சேவையின் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த முடிவில் கட்சி அவருடன் உறுதியாக நிற்கிறது” என தெரிவித்துள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள பதிவில், தர்மேந்திர பிரதானின் தலைமைத்துவம் பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய அமைச்சரவையில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தில், இந்திய கல்வித் துறையை வலுப்படுத்துவதிலும், மாணவர்களின் நலனை முன்னிலைப்படுத்துவதிலும் அவரது அர்ப்பணிப்பை கண்டுள்ளேன். கல்வி போன்ற முக்கிய துறையை வழிநடத்த அவர் மிகுந்த முயற்சியையும் தொலைநோக்கு பார்வையையும் வெளிப்படுத்தினார்” என கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய அமைச்சர் சஞ்சய் குமார் வெளியிட்டுள்ள பதிவில், தர்மேந்திர பிரதானின் ராஜினாமா “தேசம் முதலில்” என்ற பாஜகவின் கொள்கையை பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“நாடே முதலில்; கட்சி அதற்கடுத்து; தனிநபர் கடைசியாக என்பதே எங்கள் கொள்கை. மாணவர் இயக்கத்தில் தொடங்கி மத்திய அரசின் முக்கிய பொறுப்புகள் வரை தர்மேந்திர பிரதான் பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதும், தேவையான நேரத்தில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். பதவிகள் தற்காலிகமானவை; மக்களின் நம்பிக்கையே முக்கியமானது.
கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகிய முடிவு, பாஜகவின் அமைப்பு மதிப்புகளையும் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை தொடர்ந்து, பாஜக தலைவர்கள் அவரது கல்வித்துறை பணிகள், தேசிய கல்விக் கொள்கை செயல்பாடு மற்றும் மாணவர் நல நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.



