தர்மேந்திர பிரதான் விலக இளைஞர்களின் எழுச்சியே காரணம்: காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதற்கு, நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களே முக்கிய காரணம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது கல்வித் துறையில் பொறுப்புணர்வை வலியுறுத்திய மாணவர் இயக்கத்தின் வெற்றி என்றும், இந்திய மக்களின் ஜனநாயக குரலுக்கு கிடைத்த வெற்றியாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், இந்திய இளைஞர்களின் எழுச்சி, உறுதி மற்றும் விடாமுயற்சிதான் தர்மேந்திர பிரதானை பதவி விலகும் நிலைக்கு கொண்டு வந்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் வெளிவந்த தொடக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொறுப்புக்கூறலை வலியுறுத்தி குரல் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் பதவி விலகியதுடன் இந்தப் போராட்டம் முடிவடையவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எதிர்கொண்ட சம்பவங்கள் குறித்து பிரதமர் நாட்டின் மாணவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கல்வித் துறையில் அடிப்படை சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு நீதி, சமத்துவம் மற்றும் தரமான கல்வி உறுதி செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ராகுல் காந்திக்கும், இந்த இயக்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



