தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர புகார் வழக்கு: நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பிணை தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிபந்தனை முன்ஜாமீன் பெற்றனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பாக இன்று செந்தில் பாலாஜி சரணடைந்து ரூ.25,000 மதிப்பிலான இரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முன்ஜாமீன் பிணையை உறுதி செய்தது. மற்றொரு மனுதாரரான அசோக்குமார் வேறு வழக்கு காரணமாக கரூரில் இருப்பதால், அவர் வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் உத்தரவாதம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற நிபந்தனைகளின்படி, மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10:30 மணி மற்றும் மாலை 5:30 மணி என இருவேளையும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி செந்தில் பாலாஜி கையெழுத்திட வேண்டும். மேலும், வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், சாட்சிகளையோ ஆதாரங்களையோ கலைக்க முயலக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.



