ஆந்திர அரசால் பறிமுதல் செய்யப்பட்ட காசிமேடு மீனவர்களின் 7 படகுகளை உடனடியாக மீட்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஆந்திர மாநில காவல் துறை மற்றும் மீன்வளத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சென்னை காசிமேடு மீனவர்களின் 7 விசைப் படகுகளை உடனடியாக விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொழில் செய்து வருவதாகவும், நாள்தோறும் சுமார் 30,000 வியாபாரிகளும் பொதுமக்களும் இவர்களை நம்பி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மற்றும் ஆந்திர கடல் எல்லைகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருமாநில மீனவர்களும் சகோதரத்துவத்துடன் அமைதியான முறையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக படகுகளில் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்களும் பெருமளவில் பணியாற்றி வரும் சூழலில், ஆந்திர கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது எனக் கூறி 17.6.2026 அன்று காசிமேட்டைச் சேர்ந்த 7 விசைப் படகுகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசிடமும் மீன்வளத் துறை அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, வாழ்வாதார இழப்பைச் சந்தித்து வரும் காசிமேடு மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, ஆந்திர அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விரைவாக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



