முக்கிய மசோதாக்கள் வரும்போதெல்லாம் திசைதிருப்ப காங்கிரஸ் போராட்டம்: பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு
டெல்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் சமூக விரோதிகளுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை அண்ணாசாலையில் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் வி.பி.துரைசாமி, கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், 2012-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், பாஜகதான் கொண்டு வந்தது போன்ற மாயப்பிம்பத்தை உருவாக்க காங்கிரஸ் முயல்வதாகவும் சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் வரும்போதெல்லாம் மக்களை திசைதிருப்பவே காங்கிரஸ் இதுபோன்ற போராட்டங்களை நடத்துகிறது எனக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், டெல்டா பகுதிகள் வறண்டு கிடக்கும் சூழலில், மேட்டூர் அணையில் நீர் திறக்க கர்நாடகாவிடம் பேசாமல் தமிழக அமைச்சர்கள் படம் பார்க்கச் செல்வதைச் சுட்டிக்காட்டி, ஆகஸ்ட் 1-ம் தேதி தஞ்சாவூரில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.



