டெல்லியில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு தவெக ஆதரவு: நீட்டை ஒழிக்க விஜய் வலியுறுத்தல்
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்குத் தவெக முழு ஆதரவு அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு முறை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே கட்சியின் சமரசமற்ற நிலைப்பாடு என்றார்.
நீட் போன்ற தேர்வுகளை ஒழிக்கக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத் தீர்வாகச் சிறப்பு இணைப் பட்டியலை (Special Concurrent list) உருவாக்கி மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒன்றிய அரசு மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் நலனையும் மதித்து நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நிரந்தரத் தீர்வு என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.



