கரூர் நெரிசல்: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட அரசு வேலை இறுதித் தீர்ப்பிற்கு உட்பட்டது
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்பு, அதற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அளிக்கும் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போட்டித் தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே அரசுப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வேலை வழங்கத் தடை விதிக்கக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு, பணி நியமனங்கள் தொடர்பாகப் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பிற்கு உத்தரவிட்டதுடன், முதற்கட்டமாகத் தற்காலிகப் பணியே வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
அரசு தரப்பில் 31 பேருக்கு வேலை வழங்கப்பட்டு 29 பேர் பணியில் சேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப் பட்ட நிலையில், அனைத்து பணி நியமனங்களும் நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது எனக்கூறி விசாரணையை ஜூலை 27-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



