பள்ளிக்கரணை சதுப்புநிலத்தைப் பாதுகாக்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பசுமை தாயகம் அமைப்பின் சார்பில், ‘சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம் – கையெழுத்து இயக்கம்’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத் தொடக்க நிகழ்வு சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவரும் பசுமை தாயகம் அமைப்பின் ஆலோசகருமான அன்புமணி ராமதாஸ், அந்த அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் இந்த மக்கள் நலன் சார்ந்த கையெழுத்து இயக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, சென்னை மாநகரத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கும் இயற்கை வழங்கிய பெரும் கொடை பள்ளிக்கரணை சதுப்புநிலம் என்று சுட்டிக்காட்டினார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 15,000 ஏக்கராகப் பரந்து விரிந்திருந்த இந்தச் சதுப்புநிலம், தற்போது ஆக்கிரமிப்புகளால் வெறும் 2,500 ஏக்கராகச் சுருங்கிவிட்டதாகக் கவலை தெரிவித்தார். எஞ்சியிருக்கும் இந்த நிலத்தையும் அழிக்க அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்கள் சூழ்ச்சி செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
வேடந்தாங்கலை விட நான்கு மடங்கு அதிகமான பறவைகள் வந்து செல்லும் இந்தச் சதுப்புநிலம், சென்னையின் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கும் முக்கிய காரணியாக உள்ளது என்று அவர் விளக்கினார். வேளச்சேரி பகுதி முழுவதும் சதுப்புநிலமாக இருந்ததால் தான் மழைக்காலங்களில் பாலங்களில் வாகனங்களை நிறுத்தும் அவலம் ஏற்படுவதாகவும், வருங்காலச் சந்ததியினர் சென்னையில் மகிழ்ச்சியாக வாழவும் வெள்ளப் பாதிப்பைத் தடுக்கவும் இச்சதுப்புநிலத்தைப் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார்.
கடந்த கால ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி கேட்டுக்கொண்டார். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை முறைப்படி வரையறை செய்து அரசு அறிவிக்கை வெளியிட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முடியும் என்றும், இந்த இயக்கத்தில் பெறப்படும் மக்களின் கையெழுத்துகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் சட்டப்பேரவையிலும் இது குறித்துப் பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


