தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஒடிசா, மத்திய பிரதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
கோவையில் நடைபெற்று வரும் ஆடவருக்கான தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில், அரையிறுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா மற்றும் மத்திய பிரதேச அணிகள் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் முன்னேறியுள்ளன.
நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில், ஒடிசா அணி 6-4 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. ஒடிசா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பில்கான் ஓரம் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். மேலும், அலோக் குஜூர், தீபக் பிரதான் மற்றும் அமித் கிரோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், மத்திய பிரதேசம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணியை தோற்கடித்தது. அந்த அணிக்காக ராஜ்வீர் சிங் 56-வது நிமிடத்திலும், ஆஷிர் ஆதில் கான் 58-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.
இதன் மூலம், தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஒடிசா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் போட்டி நாளை (ஆகஸ்ட் 8) நடைபெற உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.



