பாலியல் வன்கொடுமை வழக்கில் தருண் தேஜ்பால் குற்றவாளி: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெண் பத்திரிகையாளருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் தெஹல்கா இதழின் நிறுவனர் தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவா செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற தெஹல்கா இதழின் நிகழ்ச்சியின்போது, நட்சத்திர ஓட்டலில் தன்னை தருண் தேஜ்பால் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், பின்னர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்கை விசாரித்த கோவா செஷன்ஸ் நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு தருண் தேஜ்பாலை விடுதலை செய்தது. பாதிக்கப்பட்ட பெண் அனுப்பிய தகவல்கள் மற்றும் அவரது நடத்தை தொடர்பான அம்சங்களை காரணமாகக் குறிப்பிட்டு நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.
இதனை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின்போது, தருண் தேஜ்பால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனுப்பிய மின்னஞ்சல் உள்ளிட்ட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான முறையில் செயல்பட வேண்டும் என்ற பொதுவான விதி இல்லை என கோவா அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஒரு பெண் “வேண்டாம்” என்று கூறினால் அதன் அர்த்தம் “வேண்டாம்” என்பதே என்பதை சமூகத்திற்கு உணர்த்தும் வகையில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான தருண் தேஜ்பால், தனக்கு 62 வயதாகிறது என்றும், அரசியல் பழிவாங்கலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை உயர் நீதிமன்றம், கோவா செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தருண் தேஜ்பால் குற்றவாளி என அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



