2026-27 நிதியாண்டில் ரூ.1.73 லட்சம் கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்: பட்ஜெட்டில் தகவல்
தமிழக அரசின் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், மொத்தம் ரூ.1,73,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடி கடனை திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுக் கடன் நிலவரம் தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது, பொதுக் கணக்கின் கீழ் உள்ள பொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்து கணக்கிடப்படுகின்றன. அதன்படி, 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட நிகர பொதுக் கடன் மற்றும் பொதுக் கணக்கு பொறுப்புகள் ரூ.1,21,653 கோடியாக இருந்த நிலையில், திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,20,964 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 2027-ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த நிலுவைப் பொறுப்புகள் ரூ.10,98,768 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது, மொத்த நிலுவைப் பொறுப்புகளின் விகிதம் 2027-28-ம் ஆண்டில் 26.57 சதவீதமாகவும், 2028-29-ம் ஆண்டில் 26.10 சதவீதமாகவும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடன் நிலைத்தன்மையை பராமரிக்கும் நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த கால நிர்வாக குறைபாடுகளால் ஏற்பட்ட கடன் சுமையால் மாநில நிதிநிலை சவால்களை சந்தித்து வருவதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் நிதிச் சமநிலையை மீட்டெடுக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கசிவுகளை கட்டுப்படுத்துதல், செலவினங்களை சீரமைத்தல் மற்றும் மக்கள்நலத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சிறந்த நிதி மேலாண்மை மூலம் நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற செலவுகளை குறைத்து, வருவாய் ஆதாரங்களை அதிகரிப்பதன் மூலம் பொதுக் கடன்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி, மனிதவள மேம்பாடு மற்றும் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம் தமிழகம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



