தவெக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது; தொலைநோக்கு திட்டங்கள் இல்லை: தமிழிசை விமர்சனம்
தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது ஏமாற்றத்தை அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் நீண்டகால வளர்ச்சிக்கான தெளிவான தொலைநோக்கு திட்டங்கள் இல்லை என்றும், இது வெற்று பட்ஜெட்டாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, 15 ஆண்டுகளுக்கான வளர்ச்சி பட்ஜெட் என அரசு கூறினாலும், அதற்கான செயல்திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆட்சியை விட குறைக்கப்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், டிஜிட்டல் வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் நவீன கல்வி வசதிகள் போன்றவை ஏற்கனவே மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழகமும் அதை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காமராஜர் பெயரில் புதிய உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கும் திட்டத்தை வரவேற்றுள்ள அவர், ஏழை மாணவர்களுக்கு பயனளிக்கும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். கிராமப்புற கலை மேம்பாட்டுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதையும் அவர் பாராட்டியுள்ளார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கைவினை கலைஞர்களுக்கு கிடைக்கும் பயன்களை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் பாரபட்சம் காரணமாக பலர் உதவிகளை பெற முடியாத நிலை இருந்ததாகவும், மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பல்வேறு திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என தமிழிசை விமர்சித்துள்ளார். நெய்தல் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.200 கோடி, சென்னை சாலை மேம்பாட்டிற்கு ரூ.25 கோடி, புற்றுநோய் மருத்துவமனை அமைப்பதற்கு ரூ.10 கோடி, பனை மர வளர்ச்சிக்கு ரூ.16 கோடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரூ.250 கோடி என ஒதுக்கப்பட்டுள்ள தொகைகள், திட்டங்களின் தேவையுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தவெக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு ஆறு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மாநிலம் முழுவதும் இலவச பேருந்து பயணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான எந்த உறுதியும் பட்ஜெட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றும், விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்ப்பதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஆன்மிக சுற்றுலா, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் சீரமைப்பு, முதியோருக்கான நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டங்கள் போன்ற சில அறிவிப்புகளை அவர் வரவேற்றுள்ளார்.
மொத்தத்தில், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி மற்றும் நிதி ஆதாரத்துடன் கூடிய திட்டங்கள் இடம்பெறாததால், தமிழக அரசின் முதல் பட்ஜெட் ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டாகவே உள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.



