தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்கள்’: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
தமிழக மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை திட்டம் அமையக்கூடும் என்றும், அதை ஆதரிப்பவர்கள் ‘எட்டப்பர்கள்’ என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பாஜக தொகுதி மறுவரையறையை கொண்டு வர திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இந்த நடவடிக்கை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் என்றும், மாநில மக்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.
மேலும், தமிழக மக்கள் யாரும் தொகுதி மறுவரையறையை ஆதரிக்கக் கூடாது என்றும், அதை ஆதரிப்பவர்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களின் எதிர்காலம் தொடர்பான முக்கியமான பிரச்சினை இது என்பதால், அனைவரும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.



