உண்மையான திரிணமூல் காங்கிரஸ் யார்? விரைவில் முடிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு மம்தா கடிதம்
யார் உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பாஜகவிடம் இழந்தது. இதில் வெற்றி பெற்ற 80 எம்எல்ஏக்களில் 60 பேர் அதிருப்தி குழு தலைவர் ரிதபிரதா பானர்ஜி தலைமையில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். “அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ள நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ், எனவே எங்களை அவ்வாறு அறிவிக்க வேண்டும்” என்று ரிதபிரதா பானர்ஜி ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் திரிணமூல் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், “உண்மையான திரிணமூல் காங்கிரஸ் நாங்கள்தான். சிலர் தாங்கள்தான் உண்மையான கட்சி என்று கூறி கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கட்சியின் பெயர், சின்னம், நிர்வாகிகளின் கட்டுப்பாடு தொடர்பான விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், “இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் 2 முறை அவகாசம் கொடுத்தும் ரிதபிரதா பானர்ஜி பதிலளிக்கவில்லை. பின்னர் அனுப்பிய கடிதத்தில் ஜூலை 25 வரை அவகாசம் கேட்டிருந்தார். தற்போது அந்த தேதியும் கடந்துவிட்டது. அவர் விளக்கம் அளித்தாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை பதிலளித்திருந்தாலும் அதன் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இரண்டு முறை கால அவகாசம் நீட்டித்தும் எதிர்தரப்பு பதிலளிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கூடுதல் அவகாசத்தை பயன்படுத்தி அவர்கள் தங்களுக்கு ஆதரவான ஆவணங்களை போலியாக தயாரிக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க வேண்டும். எனவே உடனடியாக முடிவெடுக்க வேண்டும்” என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.



