சென்னை மாநகராட்சியில் ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை; கவுன்சிலர் நிதி ஒதுக்கீட்டில் தாமதம்
சென்னை மாநகராட்சியில் ரூ.1,970 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மாமன்ற உறுப்பினர்களுக்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் விளக்கம் அளித்துள்ளார். நிதி ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை என்றும், அடுத்த மூன்று மாதங்களில் நிதி நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் ஜூலை மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் மு. மகேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக 80 முதல் 160 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படும் நிலையில், இந்த மாதம் 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் பரிதி இளம்சுருதி, தீனதயாளன் நகர் பகுதியில் மாநகராட்சி நிதியில் கட்டப்பட்ட கழிப்பறை திறப்பு விழாவுக்கு தன்னை மற்றும் மண்டலக் குழுத் தலைவரை அழைக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், 2026–27ஆம் ஆண்டுக்கான மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி இன்னும் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, மாநகராட்சி திட்ட திறப்பு விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டலக் குழுத் தலைவர்களுக்கு கட்டாயம் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றார். மேலும், உறுப்பினர் மேம்பாட்டு நிதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர் சுகன்யா செல்வம், வார்டுகளின் பராமரிப்புப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட தலா ரூ.10 லட்சம் எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த விவகாரம் தற்போது பரிசீலனையில் இருப்பதாக மேயர் பதிலளித்தார். அதேபோல், மாநகரில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்ற அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், 2022–23ஆம் ஆண்டில் ரூ.325 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை, 2023–24ஆம் ஆண்டில் ரூ.355 கோடியாகவும், 2024–25ஆம் ஆண்டில் ரூ.529 கோடியாகவும் உயர்ந்ததாக கூறினார். தற்போது 2025–26 நிதியாண்டின் இறுதியில் அது ரூ.1,970 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை நிலுவையில் இருப்பதாகவும், நிதி நெருக்கடி நீடித்தால் மேலும் கடன் பெற வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் ஆணையர் எச்சரித்தார். இந்த நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டே கவுன்சிலர்களுக்கான நிதி ஒதுக்கீடு தாமதமாகியுள்ளது என்றும், அடுத்த மூன்று மாதங்களில் நிதி நிலவரத்தை ஆய்வு செய்து தேவையான முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.



