10 ஆண்டுகளில் ஏஐ மீது மனிதர்கள் கட்டுப்பாட்டை இழக்கலாம்: எலான் மஸ்க் எச்சரிக்கை கருத்து
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து தொழிலதிபர் எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை கருத்துகளை வெளியிட்டுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்கள் ஏஐ அமைப்புகளின் மீது தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உருவாகலாம் என்றும், 2036-ஆம் ஆண்டுக்குள் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய எலான் மஸ்க், ஏஐ தொழில்நுட்பம் மிக வேகமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மனிதகுலத்தின் மொத்த அறிவையும் ஏஐ மிஞ்சிவிடும் என்றும், பெரும்பாலான பணிகளை மனிதர்களைக் காட்டிலும் திறமையாக மேற்கொள்ளும் திறனை அது பெறும் என்றும் கூறினார். மேலும், ஏஐ வளர்ச்சியால் மனிதர்கள் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு முன்னேற்றமும் வளமும் அடைவார்கள் என்ற நேர்மறையான அம்சத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரத்தில், ஏஐ மற்றும் ரோபோக்களின் வளர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்றும், மனிதகுலத்திற்கு ஏஐ அச்சுறுத்தலாக மாறுவதற்கான வாய்ப்பு 10 முதல் 20 சதவீதம் வரை இருப்பதாகவும் எலான் மஸ்க் கருத்து தெரிவித்தார். இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் உலகின் அதிகார அமைப்புகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் அளித்த பேட்டியில், மனிதர்களை விட அதிக அறிவாற்றலுடன் செயல்படும் ஏஐ அமைப்புகளின் காலகட்டத்துக்குள் உலகம் நுழைந்து வருவதாக தெரிவித்திருந்தார். அதேபோல், எதிர்கால ஏஐ மாதிரிகள் மனித தலையீடு இன்றியே தங்களைவிட மேம்பட்ட அடுத்த தலைமுறை அமைப்புகளை உருவாக்கி, மேம்படுத்தி செயல்படுத்தும் திறனை பெறக்கூடும் என்று ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனமும் கருத்து தெரிவித்துள்ளது. ஏஐ வளர்ச்சி குறித்த உலகளாவிய விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன



