சுங்கக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் பொருளாதார நிலையையும் பாதிக்கும் வகையில் சுங்கக் கட்டண உயர்வு அமைந்துள்ளதாக அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நெடுஞ்சாலை வளர்ச்சி குறித்து பெருமையாக பேசி வருவதாகவும், ஆனால் தற்போது நெடுஞ்சாலைகள் பொதுமக்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் என்ற பெயரில் அதிக அளவில் வசூலிக்கும் வழியாக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மொத்த விற்பனை விலைக் குறியீடு அடிப்படையிலான கணக்கீட்டு முறையால், கடந்த 4 மாதங்களில் மூன்றாவது முறையாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
சுங்கச்சாவடி கட்டண உயர்வு நடுத்தர குடும்பங்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து துறையினரை கடுமையாக பாதிக்கும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டதை மட்டுமே வளர்ச்சியாக கூறி வரும் மத்திய அரசு, மக்களின் சிரமங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 80 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.4,200 கோடிக்கும் அதிகமான தொகையை மத்திய அரசு வசூலித்து வருவதாகவும், அதற்கு மேலாக லாரிகளுக்கான சுங்கக் கட்டணத்தை ரூ.30 வரை உயர்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாரி உரிமையாளர்களின் வருமானத்தையும், சாமானிய மக்களின் செலவினங்களையும் பாதிக்கும் இந்த சுங்கக் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்றும், மத்திய அரசு உடனடியாக இந்த உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுங்க வருவாய் பெறும் மத்திய அரசு, மாநிலத்திற்கான முக்கிய திட்டங்களை வழங்குவதில் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வே துறைக்கு அதிக வருவாய் அளிக்கும் மாநிலமாக இருந்தும், தமிழ்நாட்டிற்கு “வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்” ஒதுக்கப்படவில்லை என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை வருவாய் ஈட்டும் மாநிலமாக மட்டும் பார்க்காமல், வளர்ச்சி திட்டங்களிலும் உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுங்கக் கட்டண உயர்வு உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலுவான குரல் எழுப்புவார்கள் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.



