717 டாஸ்மாக் கடைகள் உண்மையில் மூடப்பட்டனவா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
விஜய் தலைமையிலான தமிழக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக கூறியுள்ள நிலையில், அதுகுறித்த முழுமையான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ஆட்சிக்கு வந்த பிறகு 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு கூறினாலும், அந்தக் கடைகளின் முகவரிகள் மற்றும் பட்டியல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் இதுவரை வெளியிடப்படவில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மூடப்பட்டதாக கூறப்படும் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனவா என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு புதிய டாஸ்மாக் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கும் அரசு பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் அலுவலகங்களை அணுகுமாறு மட்டுமே பதில் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் தகவல்கள் இருந்தால், அவற்றை ஒருங்கிணைத்து பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மூடப்பட்டதாக கூறப்படும் 717 டாஸ்மாக் கடைகளின் முழு விவரங்கள், அவற்றின் முகவரிகள் மற்றும் அந்தக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப் பணிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சியின் தொடக்கத்தில் மக்களிடம் நற்பெயர் பெறும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற கேள்விக்கு முதல்வர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என்றும், வெறும் அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்களை விட உண்மைத் தகவல்களை வெளிப்படுத்துவதுதான் அவசியம் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.



