மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இடம்பெற வேண்டும்: மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழக ஆளுநர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். இந்த விழாவில் பாடல்களின் வரிசை தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், விழாவில் முதலில் வந்தே மாதரம், அதன்பின் தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலேயே அந்தப் பாடல் மூன்றாவது இடத்தில் இடம்பெறுவது தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்படும் அவமதிப்பு என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பாடல்களின் வரிசை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியதாக கூறப்படும் உத்தரவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். அந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் மாநில உரிமைகளை தமிழ்நாடு எப்போதும் பாதுகாத்து வருவதாக குறிப்பிட்ட அவர், தேசிய உணர்வுக்கும் தமிழ் அடையாளத்துக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மொழி மற்றும் கலாச்சார பெருமையை மதிக்காமல் செயல்படுவது கண்டனத்திற்குரியது எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் நடைமுறையை சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர், அதே நடைமுறை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தமிழ் மொழி மற்றும் தமிழர் பெருமையை தொடர்ந்து புறக்கணித்தால் மக்கள் அதற்கு உரிய பதிலடி வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



