இந்தியாவில் 4.1 கோடி குழந்தைகள் உடல் பருமனால் பாதிப்பு: ஆரோக்கிய நடவடிக்கைகள் அவசியம் என ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
இந்தியாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்சினை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக உடல் பருமன் அறிக்கை 2026-ன் தகவலின்படி, நாட்டில் சுமார் 4.1 கோடி குழந்தைகள் அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு அறிக்கையை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பாக்கெட் உணவுகளில் தெளிவான ஊட்டச்சத்து குறியீடுகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆரோக்கியமற்ற உணவுகளின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் சத்தான உணவுகளை வழங்குதல், அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தல், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் மற்றும் அதன் 50 மீட்டர் சுற்றளவுக்குள் ஆரோக்கியமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) விதிகளை தொடர்ந்து கண்காணித்து கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவுகளுக்கான தெளிவான சட்ட வரையறைகள் இல்லாததால், தற்போதுள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்து நீடித்தால், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஏற்படும் சிறுவர் உடல் பருமன் பாதிப்புகளில் 11 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு இந்தியாவைச் சேர்ந்ததாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் ஏற்படும் நோய் பாதிப்புகளில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்களுடன் தொடர்புடையதாக இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



