ரூ.35 கோடி பேரம் வழக்கு: செந்தில் பாலாஜி, அசோக்குமார் காவல் நிலையத்தில் ஆஜர்; 2 மணி நேரம் விசாரணை
தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இருவரிடமும் போலீசார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.
சட்டப்பேரவைத் தலைவர் தொடர்பான தீர்மானத்தில் தவெக நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, இருவரையும் விசாரணைக்கு அழைக்கும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி, உத்தரவு நகல் கிடைத்த 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும், தலா ரூ.25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும், தினமும் காலை மற்றும் மாலை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10.45 மணியளவில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணை அதிகாரியான காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் ஆஜராகினர்.
அப்போது ரூ.35 கோடி பேரம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து இருவரிடமும் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, இந்த குற்றச்சாட்டுக்கு அவர்களின் பதில் என்ன, கைது செய்யப்பட்ட 14 பேருடன் உள்ள தொடர்பு என்ன, புகார் அளிக்கப்பட்ட பிறகு உடனடியாக விசாரணைக்கு ஆஜராகாததற்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, விசாரணை முடிந்த பின்னர் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர்கள் விசாரணை குறித்து கேள்வி எழுப்பியபோது, “இன்னொரு நாள் விளக்கம் அளிக்கிறேன்” எனக் கூறிவிட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.



