டாஸ்மாக் மது விற்பனை தனியார்மயம்? – அமைச்சர் விக்னேஷ் சூசக தகவல்
தமிழகத்தில் மதுபான விற்பனையில் ரெஸ்டோ பார் மற்றும் தனியார்மயம் குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் துறையைச் சீரமைக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் வேண்டாம் என்று கருதினால் அரசு இத்திட்டத்தைச் செயல்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தினார்.
தமிழகம் முழுவதும் கடைகளில் தேங்கிக் கிடக்கும் மது பாட்டில்களைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இனி குடிமகன்கள் விரும்பும் பிராண்டுகளை மட்டுமே கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், திண்டுக்கல் அருகே சிறுமலை மற்றும் ஜல்லிப்பட்டி போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாகச் சில்லிங் முறையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மற்றும் அவர்களுக்கு மது பாட்டில்களை விநியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எச்சரித்தார்.
மது விற்பனையைத் தனியார்மயமாக்குவது மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டோ பார்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார். நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிப் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறைவாரியாக மறுஆய்வு செய்யப்பட்டது.



