தூத்துக்குடி லாக்கப் மரணம்: “தவெக ஆட்சியின் தொடக்கத்திலேயே அத்துமீறல்கள்” – நயினார் நாகேந்திரன் சாட்டம்
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அருணாச்சலத்தின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவல்துறையினரின் தாக்குதலால் தான் அருணாச்சலம் உயிரிழந்துள்ளார் என்றும், அந்த குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக திகழ்ந்த அவரது மறைவுக்குக் காரணமான காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறை அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட போது அதைச் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களைக் காவல்துறையினர் மிரட்டிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை அவர் சரியாகக் கையாளவில்லை என்றும், தவெக அரசு அமைந்த தொடக்கத்திலேயே நாகர்கோவில், தூத்துக்குடி என அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நிகழத் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாடினார்.
முந்தைய ஆட்சிக் காலங்களில் சாத்தான்குளம் மற்றும் சிவகங்கை சம்பவங்கள் போன்ற லாக்கப் மரணங்கள் அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதிக் கட்டத்திலேயே நடைபெற்றதாகவும், ஆனால் இந்த ஆட்சியில் தொடக்கத்திலேயே இதுபோன்ற கொடுமைகள் நிகழ்வதாகவும் அவர் கூறினார். அந்த ஆட்சிகளுக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததன் பலனை இப்போது அனுபவித்து வருவதாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.



