நீட் தேர்வு தொடர்பான திரைத் துறையினரின் எதிர்ப்பு அடிப்படை புரிதலற்றது: தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்
நீட் தேர்வு குறித்த உண்மைகளை உணராமல், மருத்துவப் படிப்பு பற்றி எந்தவித அடிப்படை புரிதலும் இன்றி கலைத்துறையைச் சேர்ந்த சிலர் நீட் தேர்வை எதிர்த்துப் பேசி வருவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை விமர்சித்த நிலையில் தமிழிசை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்தபோது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததை சுட்டிக்காட்டிய அவர், அதன்மூலம் சாமானியக் குடும்பத்து மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றதை நேரில் கண்டு மகிழ்ந்ததாகத் தெரிவித்தார். நீட் இல்லாத காலத்தில் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு கிடைத்தது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகவும், அன்று லட்சக்கணக்கில் செலவழித்து ‘டியூஷன்’ படித்த வசதி படைத்தவர்களும், கோடிக்கணக்கில் பணம் கொடுத்தவர்களுமே தனியார் கல்லூரிகளில் சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலக அளவில் உயர் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இருக்கும் போது, மனித உயிரைக் காக்கும் மருத்துவத் துறைக்கு அது தேவையில்லை எனக் கூறுவது நியாயமில்லை என்றும், உச்ச நீதிமன்றமே இதன் தேவையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவ இடங்கள் 51,000-லிருந்து 1,36,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவக் கல்வியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள் சாமானிய மக்களுக்குக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை எதிர்க்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.



