‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் கொண்டாட்டம்: திரையில் விஜய்யைப் பார்த்துத் தேம்பி அழுத அமைச்சர்கள்!
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கட்-அவுட்களுக்குப் பால் அபிஷேகம் செய்தும், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் கோலாகலமாகக் கொண்டாடினர். கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து திரையரங்குகளிலும் படம் பார்க்கக் கூட்டங்கள் அலைமோதின.
இத்திரைப்படத்தைப் பார்த்த அமைச்சர்கள் முகமது பர்வேஸ், சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் படம் பார்த்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ், திரையில் விஜய்யைப் பார்த்ததும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார். இதேபோல், கரூர் திண்ணப்பா திரையரங்கில் படம் பார்த்த தவெக மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகனும் திரையில் விஜய் தோன்றியதும் தேம்பித் தேம்பி அழுதார்.
கோவை நூறடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாரும், போத்தனூர் அரசன் திரையரங்கில் மதுவிலக்குத் துறை அமைச்சர் கே.விக்னேஷும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். படத்தின் முடிவு தருவாயில் அமைச்சர்கள் இருவரும் உணர்ச்சிப் பெருக்கால் அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.
புதுச்சேரியில் காலை 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, காலை 10.45 மணியளவிலேயே முதல் காட்சி தொடங்கியது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் படம் தொடங்கியதும், திரையில் ‘தமிழக முதல்வர் விஜய்’ என டைட்டில் கார்டு வந்தவுடன் ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டு, விசில் அடித்துக் கொண்டாடினர்.



